
தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய துறைகளின் செயலாளர்களாக பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளராக பணியாற்றி வந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் மற்றும் பேரிடர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று சிட்கோ மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த மதுமதி ஐஏஎஸ் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை இணை செயலாளராகவும், தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்து தீரஜ் குமார் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆணி மேரி ஸ்வர்ணா உள்துறை இணைச் செயலாளராகவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக வீரராகவர் ராவும், உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை செயலாளராகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணாவுக்கு பதில் புதிய கலெக்டராக லட்சுமி பவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.