
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரது காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் பலமுறை திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் காதலுக்கு பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மன வேதனையில் இருந்துள்ளனர். இதனால் நேற்று காதல் ஜோடி இருவரும் அவரவர் வீட்டில் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.