
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் அதனை நம்பி பணத்தை இழந்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினரும் அரசாங்கமும் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் ஆன்லைன் மோசடிகளால் பலர் ஏமாற்றம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி என்னும் பகுதியில் 29 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு முகவரி முகநூல் மூலம் ஒரு செய்தி வந்தது. அந்த செய்தியில் பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்தது.
அதனைக் கண்ட அந்தப் பெண் உண்மை என நம்பி கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ரூ. 4 லட்சத்து 16 ஆயிரத்து 167 பணத்தை அதில் முதலீடாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு பணத்தை திரும்ப பெற முயன்றுள்ளார். அப்போது அவர் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. எனவே அந்தப் பெண் தான் பணத்தை இழந்தது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.