
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தாஸ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுனிதா (35) என்ற மனைவியும், தேவி ஸ்ரீ (13), நீரஜா (11) என்ற மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் தாசுக்கு மோகன் (36) என்ற தம்பி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடத்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே மோகனின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மோகனுக்கு குடும்பத்தினர் 2 ஆம் திருமணம் செய்து வைத்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே திருமணம் தனக்கு பிடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் குடும்பத்தினர் வற்புறுத்தலின் பேரில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
அவர் தன் மனைவியுடன் அதே பகுதியில் வசித்து வரும் நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மோகன் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன் குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவி சென்று விட்டார். இதனால் மோகன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் அண்ணனுடன் தொடர்ந்து மோகன் தகராறு செய்துள்ளார். அதாவது தனக்கு விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்த நிலையில் தற்போது மனைவியும் பிரிந்து சென்று விட்டார். ஆனால் நீ மட்டும் உன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாயே என்று கூறி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் தாஸ் வெளியே சென்றுவிட்ட நிலையில் வீட்டில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது வீட்டிற்கு சென்ற மோகன் தன் அண்ணியை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் உடனடியாக கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் குழந்தைகளையும் அவர் கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தானும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.