கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான  மக்கள் சிக்கிக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன்படி 151 பேர்  உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த காளிதாஸ் என்பவர் கட்டட பணிக்காக வயநாட்டில் உள்ள ஒரு பகுதியில் தனது உறவினருடன் வசித்து வந்தார். அப்போது நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.