
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது என்றும், அந்த சிம்மில் வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அந்த எண்ணில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் ஹவாலா பணவர்த்தனை நடந்திருப்பதாகவும் கூறினர். அதோடு இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்து இருக்கிறோம். இதில் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதால் உங்களையும் கைது செய்ய இருக்கிறோம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பானுமதியின் வங்கி கணக்கில் இருக்கும் ரூ. 84,50,000 பணத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்குக்கு அனுப்பச் சொல்லி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன பானுமதி தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அங்கு இவர் கொடுத்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட அபிஜித் சிங் என்பவரை காவல் துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் செய்த விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அதோடு அவரிடமிருந்து ரூ.44000 ரொக்கம், 5 செல்போன் 103 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஒரு லேப்டாப், 28 காசோலை புத்தகங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. மேலும் குற்றவாளியை டெல்லி வரை சென்று கைது செய்த சைபர் கிரைம் காவல் துறையினருக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.