துருக்கி நாட்டின் அதிபராக ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, 2 சிறுவர்கள் மேடை ஏறி வந்தனர். அதில் ஒருவர் அதிபரின் கையில் முத்தமிடாமல் சென்றார். துருக்கியின் கலாச்சாரத்தின் படி பெரியவர்கள் கைகளில் முத்தமிடுவது மரியாதை என்று கருதப்படுகிறது. இதையடுத்து அதிபர் அந்த சிறுவனின் கன்னத்தில் லேசாக தட்டியுள்ளார். பின்னர் அந்த சிறுவன் அதிபரின் கைகளில் முத்தமிட்டு பரிசுகளும் பெற்று சென்றார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் அதிபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, சிலர் “இது ஒரு சாதாரண விஷயம் தான்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் சலர்கா சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. அப்போது ஒரு சிறுவனின் தலையில் அவர் தட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்ற ஆண்டு எர்டோகன் தனது பேரனை அறைந்தாகவும் கூறப்பட்டது. அந்த கருத்தை மறுத்த அதிபர்,  தனது பேரனின் தலையில் தடவி கொடுத்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.