குஜராத் மாநிலம் நவுசாரி பகுதியில் பங்கத்திபென் படேல் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருடைய வீட்டில் மொத்தம் 4 பேர் இருக்கும் நிலையில் தற்போது மின்கட்டணம் வந்துள்ளது. அதில் அவர்களுக்கு ரூ.20 லட்சம் செலுத்த வேண்டும் என்று இருக்கிறது. இதை பார்த்து அவருடைய குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பங்கத்திபென் படேல் கூறியதாவது, பொதுவாக எங்கள் வீட்டிற்கு ரூ.2000 முதல் ரூ‌.2500 வரை மின்கட்டணம் வரும்.

எங்கள் வீட்டில் 4 மின்விளக்குகள், 4 மின்விசிறிகள், ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் ஒரு டிவி போன்றவைகள் தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் வந்துள்ளது. அதில் ரூ‌ 20,01,902 செலுத்த வேண்டும் என்று இருக்கிறது என்று கூறினார். பின்னர் இது தொடர்பாக அம்மாநில மின்வாரியத்தில் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து மின் மீட்டரை ஆய்வு செய்தனர். அப்போது அதில் கணக்கீடு தவறாக எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதைத்தொடர்ந்து சரியான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால் அவருடைய குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.