கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த பகுதிகளில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மொத்தம் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 131 பேரை காணவில்லை. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு  ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த ஒரு சிறுமியை தூக்கி அவர் கொஞ்சி விளையாடினார். அந்த சிறுமி பிரதமர் மோடியின் முகத்தை தொட்டு விளையாடியதோடு அவரின் கண்ணாடியையும் பிடித்து இழுத்தார். அந்த சிறுமியின் செயலை பிரதமர் மோடி புன்னகையுடன் ரசித்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.