ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு லாரி கிளீனரின் மரணம் தொடர்பான சந்தேகமான சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் விபத்து என்று கருதப்பட்ட இந்த சம்பவம், போலீசின் ஆய்வில் கொலையாக மாறியுள்ளது.

இந்த சம்பவத்தில், இறந்த நபரின் மனைவி கடந்த இரண்டரை மாதங்களாக உண்மையை மறைத்து வந்துள்ளார். போலீசார் அவரது மொபைலை சோதனை செய்தபோது, ஒரு கள்ளக் காதல் மற்றும் கொலை திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முராரி லால் பைர்வா என்பவர், மே மாதம் 20ஆம் தேதி இரவு டிரைவர் பாபுலால் மீனாவுடன் அசாம் மாநிலத்திலிருந்து வந்து கொண்டிருந்தார். வழியில், சிக்கந்திரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரேட்டா கிராமத்திற்கு அருகில், பாபுலால் – லாலுக்கு அதிக அளவு மது அருந்த வைத்து, பின்னர் அவரை லாரியால் இடித்து கொலை செய்துள்ளார்.

மே மாதம் 21ஆம் தேதி காலை, முராரி லாலின் உடல் தலை நசுங்கிய நிலையில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சாலை விபத்து என்று கருதப்பட்டாலும், கொலை என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரஞ்சிதா ஷர்மா, விசாரணையை மன்புர் துணை போலீஸ் சூப்பிரண்டுவிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், முராரி லால் மற்றும் அவரது மனைவி கேசந்தா பைர்வா திருமணத்திற்குப் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாக தெரியவந்ததுள்ளது . ஆனால் பின்னர், பாபுலால் மீனா, கேசந்தாவை தனது காதல் வலையில் சிக்க வைத்தது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர், மேலும் இவர்கள் வெளிப்படையாக ஒன்றாக வாழ விரும்பினர். அந்த பெண்ணின் கணவர் முராரி லால் அவர்களின் வழியில் தடையாக இருந்ததால், அவரை கொல்ல திட்டம் தீட்டினர். இந்த திட்டத்திற்காக, பெண் தனது கணவருக்கு காதலன் பாபுலாலின் லாரியில் கிளீனர் வேலை வாங்கி கொடுத்தார்.

இந்த சதியின் ஒரு பகுதியாக, டிரைவர் பாபுலால், முராரிக்கு மது அருந்த வைத்து அவரை லாரியால் இடித்து கொலை செய்தார். இது குறித்து கேசந்தாவுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த செய்தி போலீஸுக்கு கிடைத்ததால் முழு விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்தது. போலீசார் காதல் ஜோடியை கைது செய்துள்ளனர்.