வங்காள தேசத்தில் மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதைத்தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் இடைக்கால அரசின் புதிய தலைவராக முகமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வங்கதேச சூழல் குறித்து தற்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசிதரூர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். இது பற்றி அவர் பேசியதாவது, எனக்கு முகமது யூனிஸ் பற்றி நன்றாக தெரியும். அவர் பாகிஸ்தானை விட அமெரிக்காவிடம் தான் மிகுந்த நெருக்கமாக இருக்கிறார்.

தற்போது அங்கு பதவியேற்றுள்ள அரசை பார்க்கும்போது நமக்குவிரோதமான நாடுகள் குறித்து இந்தியா கவலை கொள்ள எந்த காரணமும் இல்லை என்பது போல் தோன்றுகிறது. இந்தியாவின் நண்பர் ஷேக் ஹசீனா. நண்பர் ஒருவர் ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தியா அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர்களின் வீடுகளையும் கோவில்களையும் முஸ்லிம்கள் பாதுகாக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மேலும் முகமது யூனிஸ் விரைவில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் முற்றிலுமாக தடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் என்று கூறினார்.