சமூக வலைதளங்களில் பிரபலமடைய தற்போது இளைஞர்கள் பலர் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது காசியாபாதில் நடந்துள்ளது.

இந்திராபுரத்தில் உள்ள க்ளவுட் -9 சொசைட்டியில் வசித்து வரும் 16 வயது சிறுமி மோனிகா, தனது வீட்டின் பால்கனியில் இருந்து செல்போனை விழவிடாமல் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காயம் அடைந்த சிறுமி தனது தாய்  மற்றும்  தந்தையை அழைக்குமாறு கதறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், சிறுமியின் தாய் அவரை திட்டும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் புகழ் தேடி செல்லும் இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைக்கக் கூடாது என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.