நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில் இருந்து கூட்டாடா கிராமத்திற்கு அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அதன் பின் நேற்று காலை 6:30 மணி அளவில் கூட்டடாவில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு கோத்தகிரி நோக்கி பேருந்தை இயக்கி வந்துள்ளார்.

அப்போது பேருந்து கோவில் மட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு பெய்த கனமழையால் சாலையின் நடுவே மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை கண்ட பிரதாப் பேருந்தை நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு எச்சரித்தார். இதனால் பதட்டமடைந்த பயணிகளும், நடத்துனரும் பின்வாசல் வழியாக கீழே இறங்கினர்.

இதைத்தொடர்ந்து பிரதாப் பேருந்தில் இருந்து இறங்க முயற்சி செய்தார். அப்போது மின்சாரம் அருந்து கிடந்த மின் கம்பியின் மூலம் பேருந்தின் மீது பாய்ந்ததால் எதிர்பாராத விதமாக பிரதாப் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட பிரதாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பயணிகளை காப்பாற்றி மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஓட்டுநர் பிரதாப் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.