ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில்  சனிக்கிழமை ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இறந்த பெண்ணின் பெயர் ராம்யா (35) என்பதாகவும், இவரது குழந்தைகளுக்கு வயது 9 மற்றும் 5 என்பதாகவும் தெரியவந்துள்ளது. கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில், ராம்யா தனது குழந்தைகளுடன் மட்டும் வசித்து வந்துள்ளார்.

அப்போது திடீரென அவருடைய வீட்டில் தீ பற்றி எரிந்ததால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவு உள்ளிருந்து பூட்டியிருந்ததால் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது தீயில் கருகிய நிலையில் தாய் மற்றும் குழந்தைகளின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், தற்கொலை சம்பவமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.