
முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிக் கதைகளை கூறியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீடியோ கேம்கள், போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்று இவர்கள் சுட்டித்தனமாக செய்யும் சேட்டைகள் ஏராளம். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு 5 வயது சிறுவன் சென்றுள்ளார். தனியாக சென்ற சிறுவனை பார்த்த காவல்துறையினர் வழி தப்பி வந்து இருப்பாரோ என்று நினைத்தனர். அதன் பின் அவரை அழைத்து சேரில் உட்கார வைத்து பேச தொடங்கினர். அப்போது அந்த சிறுவன் கூறியதாவது, சார் என் பேரு ஹசானைன், என் அப்பா இக்பால், அவர் என்னை அடிக்கடி திட்டுகிறார். அதோடு ரோடு பக்கம் போக கூடாது, ஆற்றங்கரைக்கு போகக்கூடாது என்ற கண்டிஷனையும் போடுகிறார். எனக்கு தொந்தரவு கொடுக்கிறார், பல நேரங்களில் அடிக்கவும் செய்கிறார். அவர் மேல் நடவடிக்கை எடுக்கணும், அவரை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று தனது புகாரை அடுக்கிக் கொண்டே போனார்.
கோபத்தில் கொந்தளிக்கும் சிறுவனை பார்த்து அங்குள்ள காவல்துறையினர் சிரித்து பேசி சமாதானம் படுத்தினார்கள். அதன் பிறகு அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்தனர். அப்போது தந்தை வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றுள்ளார். இதனால் காவல்துறையினர் அந்தச் சிறுவனின் தந்தையை செல்ஃபோன் மூலம் அழைத்து அறிவுரை கூறினர். பின்னர் சிறுவனிடமும், தினமும் பள்ளிக்கு ஒழுங்காக செல்ல வேண்டும், குறும்புகள் செய்யக்கூடாது, தாய் தந்தை சொல் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதற்கு இடையில் சிறுவனின் புகாரை ரசித்த காவல்துறையினர் சிலர் செல்போனில் அதனை பதிவு செய்தனர். பின் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. இது பலரையும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் வீடியோவாக மாறியுள்ளது. இது தொடர்பாக சிறுவனின் தந்தைக்கு சிலர் போன் செய்து சிறுவனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு பதில் அளிக்க என்னால் முடியவில்லை என்று அவரது தந்தை கூறியுள்ளார்.