
சென்னை வேளச்சேரி பகுதியில் சின்னையா என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி சிறுவனின் இடது காலின் விரலில் வலி இருந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் சிறுவனை சோதித்து நரம்பு சம்பந்தமான பிரச்சினை என்பதால் மவுண்ட் மல்டி ஸ்பெஷலிஸ்ட் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அங்கு பெற்றோர் சிறுவனை மருத்துவர் சரவணன் பாலச்சந்திரனிடம் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுவனை சோதித்த மருத்துவர் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதை ஆஞ்சியோ பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்து விடலாம் என கூறியுள்ளார். அதோடு சிறுவனுக்கு சிகிச்சையும் அளித்துள்ளார். சிகிச்சைக்கு பின் திடீரென சிறுவனின் இடது கால் முட்டி முதல் பாதம் வரை கருப்பு நிறமாக மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீண்டும் அதே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மருத்துவர் சிறுவனுக்கு காலில் வேறொரு பிரச்சனை இருப்பதாக கூறி மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன்பின் சிறுவனின் கால் முட்டிக்கு கீழ் கட்டி ஒன்று இருப்பதாக கூறி சிறுவனின் காலை நீக்கவில்லை என்றால் அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பெற்றோரிடம் கூறினர். இதனால் பயந்த பெற்றோர் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால் சிறுவனின் கால் நீக்கப்பட்டது. மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததால் தனது மகனுக்கு காலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த பெற்றோர் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்தனர்.
இதற்கிடையே சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையை ஏற்றுக்கொள்ளும் மருத்துவருக்கான ஊதியத்தை மற்றும் நீங்கள் தந்தால் போதும் என பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பின் சுகாதார துறை மற்றும் குடும்ப நலத்துறை தலைமை அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணியனிடம் பெற்றோர்கள் நேரில் சென்று மனு கொடுத்தனர். அரசு செலவில் சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்துவதாக தலைவர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அதிகாரிகள் மருத்துவமனையை சோதனை செய்தனர். அங்கு போதிய வசதி மற்றும் சரியாக பராமரிப்பு இல்லாததால் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மேலும் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு 7 நாட்களுக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.