
பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் வயிற்றிலிருந்து சாவி, மோதிரம், சிறிய கத்தி, ஆணிவேட்டிகள் போன்ற உலோகப் பொருள்கள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது.
அதாவது சம்பராண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்க தயாராயினர்.
அப்போது வெளிவந்த அவரது எக்ஸ்ரேவில் உலோகப் பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இது குறித்து இளைஞரின் பெற்றோரிடம் விசாரிக்கும் போது கடந்த சில நாட்களாக இளைஞர் உலோகப்பொருட்களை விழுங்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாக கூறினார்கள்.
அதன் பின் அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அறுவை சிகிச்சையை டாக்டர் அமித் குமார் வழிநடத்திய நிலையில் முதலில் ஒரு முக்கிய மோதிரத்தை மருத்துவ குழு அகற்றியது. அதன்பின் 2 சாவிகள், 4 அங்குல கத்தி மற்றும் 2 ஆணிவேட்டிகள் அடுத்தடுத்து அகற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் கூறுகையில் அறுவை சிகிச்சை பின் நோயாளி உடல்நிலை மேம்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் தெரிவித்தனர். இருப்பினும் அவரது மனநல பாதிப்பு அசாதாரண நடத்தைக்கு வழி வகுத்ததால் இவ்வாறு நடந்துள்ளது என்றும் கூறினார்கள்.