தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமாக மண்டபம் ஒன்று உள்ளது. அந்த மண்டபம் ஏரிக்கு சொந்தமான 3.30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அரசு இடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி நாகார்ஜுனாவின் மண்டபமும் இடிக்கப்பட்டது. இதற்கு அவர் “மண்டபம் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு முறைபடியான பட்டா உள்ளது என்றும் ஓர் அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை” எனவும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜென்ம அஷ்டமி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் ” தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் அதற்கு எந்த வழியையும் கடைபிடிக்கலாம் என்பதை மகாபாரதம் வாயிலாக நமக்கு கிருஷ்ண பகவான் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து மக்கள் நலனுக்காக தர்மத்தை காப்பாற்றி அதர்மத்தை அளிக்க வேண்டும் என பகவத் கீதையிலும் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார். ஏரி, குளங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்காக படைக்கப்பட்டவை, இவற்றை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவது பெரும் பாவம். அரசு மக்கள் நலனுக்காக மட்டுமே ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்களுக்கு எந்த வித ஆபத்து ஏற்படாது” எனவும் அவர் கூறியுள்ளார்.