
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி என்னும் பகுதியில் 2 மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்கள் கோர விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதாவது கேந்திரிய வித்யாலயா மைதானம் பகுதி விலிங்டன் ஐலேண்ட் சாலையில் அமைந்துள்ளது. இதற்கு முன் பகுதியில் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் மெர்சரிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 2 விலை உயர்ந்த AMG மாடல்கள் சாலையில் சென்று கொண்டிருந்தது.
மிகவும் வேகமாக செல்லும் திறன் கொண்ட இந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்ததனால் விபத்து நடந்தது. இந்நிலையில் ஒரு பெண் மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT 63 S E என்ற காரை ரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையில் இயக்கி வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் வேகமாக இயக்கியதால் அங்கிருந்த பழைய ரயில்வே தண்டவாள பகுதியின் மீது கார் ஏறியது. அதன் பின் தரையில் இருந்து மேலெழுந்து பிறகும் கீழே இறங்கியது.
இதனால் காரை ஓட்டி வந்த பெண் அதனை கட்டுப்படுத்த முடியாததால் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது கார் மோதியது. இதனை அடுத்து அந்தப் பெண் காரை திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல் SSL55 ன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் பென்ஸ் GT63 SEஎன்ற காரின் முன் பகுதி முழுவதும் சிதைந்து போனது மட்டுமல்லாமல் எதிரே வந்த SSL55 என்ற காரின் முன்புற சக்கரம் முழுவதும் சேதமடைந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய பெண் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கி 2 கார்களையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு விபத்தில் சிக்கிய மெர்சிடிஸ் பென்ஸ் GT 63 SE என்ற காரின் விலை ரூ 3 கோடியே 30 லட்சம் என்றும் மற்றொரு காரான SSL 55 இன் விலை ரூ.2 கோடியே 44 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.