
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அக்டோபர் 2 ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த நிலையில் அவர்கள் கலந்து கொள்வார்களா இல்லையா என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரியவரும். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது திருமாவின் மது ஒழிப்பு மாநாடு நல்ல விஷயம்தான். அதில் கலந்து கொள்ள வேண்டுமா இல்லையா என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும் என்றார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டில் நடிகர் விஜய் கலந்து கொள்ளலாம் என்று தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஒருவேளை அவர் கலந்து கொள்ள விட்டாலும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதோடு மாநாடு வெற்றி பெற திருமாவளவனுக்கு வாழ்த்து செய்தி விஜய் அனுப்புவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமாவளவன் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுத்தது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அமையப்போகும் புது கூட்டணிக்கான அடித்தளமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கொள்கை வேறு கூட்டணி வேறு என்று திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் திருமாவளவன் கூறியது எந்த அளவுக்கு உண்மை என்பது வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தெரியவரும். இருப்பினும் திமுக கட்சியின் அமைச்சர்கள் பலரும் கூட்டணியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று தான் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.