கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம் நடத்திய நிலையில் ஸ்ரீ அன்னபூர்ணா சீனிவாசன் ஜிஎஸ்டி வரி குறித்து பேசினார். அவர் இனிப்புக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி என்றும் காரத்துக்கு 12 சதவீதம் வரி என்றும் இதில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அதில் வைக்கிற க்ரீமுக்கு ஜிஎஸ்டி இருப்பதால் பண்ணை மட்டும் கொண்டு வாருங்கள் க்ரீமை நாங்களே வைத்துக் கொள்கிறோம் என்று வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். பல்வேறு ஜிஎஸ்டி வரிகளால் கம்ப்யூட்டரே குழம்புகிறது என்று கூறினார்.

அவர் இப்படி துணிச்சலாக ஜிஎஸ்டி குறித்து பேசிய நிலையில் திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்து தான் பேசியதற்கும் மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ வெளியானதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நான் அன்னபூர்ணா ஹோட்டலுக்கு சென்ற ஜிலேபி சாப்பிட்டு பிரச்சினை செய்ததாக சீனிவாசன் கூறியிருந்தார். ஆனால் நான் அவருடைய ஹோட்டலுக்கு சென்றதோ அங்கு ஜிலேபி சாப்பிட்டதோ கிடையாது. அவர் எனக்கு மறுநாள் காலையில் இருந்து தவறாக பேசி விட்டேன் நான் மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் ஹோட்டலுக்கு வந்து தான் தவறாக பேசி விட்டேன். நான் பேசியதால் உங்கள் மனது புண்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு மன்னித்து விடுங்கள் என்று அவராக முன் வந்து தான் மன்னிப்பு கேட்டார். ஆனால் சமூக வலைதளங்களில் இது வேறு மாதிரியாக பரவி விட்டது என்று கூறினார்.