
ஆப்பிரிக்காவில் பரவி வரும் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிராக பெரியவர்களுக்கான தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசியை தற்போது நன்கொடையாளர்கள்தான் வாங்க முடியும். ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளது. உலக சுகாதார அமைப்பு, நன்கொடையாளர்களை தடுப்பூசியை விரைவாக வாங்கி தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் கொடுக்கலாம். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கொடுக்க ஒப்புதல் கிடைக்கவில்லை என்றாலும், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கோ நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.