திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்த அவரிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்தனர். அப்போது வாட்ஸ் அப் குழு மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் செய்ததும், அதில் இருந்து வந்த பணத்தில் வந்தவாசியில் சொகுசு வீடுகள் கட்டியதும் தெரிய வந்துள்ளது.

அந்த வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் லாட்டரி விற்பனைக்கு ஏஜெண்டாக செயல்பட்ட செங்கல்பட்டை சேர்ந்த சையது இப்ராஹிம், காஞ்சிபுரத்தை சேர்ந்த நாகராஜ், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அருணின் 3 வங்கி கணக்குகள், அவரது மனைவியின் 2 வங்கி கணக்குகள் ஏஜெண்டுகளின் என மொத்தம் 7 வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.