
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததற்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், மாநிலச் சட்டங்களின் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே போதும், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தேவையில்லை என வலியுறுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அவை சட்டமாகும். ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் இந்த நடைமுறையை மீறி மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து, அவற்றை நிறுத்தி வைப்பதன் மூலம் மாநில உரிமைகளை மீறுவதாக அப்பாவு குற்றம் சாட்டினார்.
மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், தமிழ்நாட்டு மக்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும், மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாததால், இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை மதித்து செயல்பட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.