
சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட “சார்க்கோ” எனும் இயந்திரம் முதன்முறையாக உயிரை மாய்த்துக்கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை “தி லாஸ்ட் ரிசார்ட்” என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது, குறிப்பாக நீண்டகால நோய்கள் மற்றும் வேதனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாங்களே தங்கள் உயிரை முடிவுக்குக் கொண்டுசெல்ல உதவியாக உள்ளது. 64 வயது அமெரிக்க பெண் ஒருவர், Schaffhausen மாகாணத்தில் திங்கட்கிழமை அன்று இந்த இயந்திரம் மூலம் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இச்சம்பவத்தின் பின்னர், சுவிஸ் பொலிசார் உடனடியாக செயல்பட்டு, அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரான பிளோரியன் வில்லெட் மற்றும் இன்னும் சிலரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும், சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இருவரும் அடக்கம். இந்த இயந்திரத்தின் சட்டப்பூர்வத்தன்மை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சுவிஸ் சுகாதாரத் துறை அமைச்சர் எலிசபெத் போம்-ஷ்னைடர், இந்த இயந்திரத்தில் நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுவது சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். “சார்க்கோ” இயந்திரம் தயாரிப்புகளின் பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லாததால், அதன் பயன்படுத்தல் குறித்து அரசியல்மட்டத்தில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.