
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுகவின் வாக்குகள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் அதிமுக ஐடி விங் டிஜிட்டல் பதாகையை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பதற்காக சென்றார். அப்போது திடீரென எங்கிருந்தோ ஒரு செல்போன் பறந்து வந்து எடப்பாடி பழனிச்சாமியின் கன்னத்தில் விழுந்தது.

இதில் திடீரென பதறிப் போன எடப்பாடி பழனிச்சாமி சுற்றும் முற்றும் பார்த்தார். இருப்பினும் செல்போனை தட்டி விட்டு சிரித்த முகத்துடன் காணப்பட்டார். இதைத்தொடர்ந்து செல்போன் வீசியது யார் என்று கேட்டபோது புகைப்படம் எடுக்கும் போது தவறுதலாக விழுந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அண்ணன் இபிஎஸ் மீது செல்போன் எறிந்தது கண்டிக்கத்தக்கது.
இது முற்றிலும் அநாகரீகமான செயல். கருத்து வேறுபாடு இருந்தாலும் நம்முடைய மரியாதையையும் சீர்திருத்தமும் குறைவாகி விடக்கூடாது என்றார். மேலும் ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி எந்த காரணத்தை கொண்டும் கட்சியில் இணைக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அவருடைய மகன் ரவீந்திரநாத் அண்ணன் என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.