
காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான போர் ஒராண்டு நிறைவடைய இருப்பதை முன்னிட்டு பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 41,825 பாலஸ்தீனர்கள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான பலியானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சமூகத்தில் பெரும் சோகமும், பரிதாபமும் நிலவுகிறது.
மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ள நிலையில், 96,910 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் பலர் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புகள், தாக்குதல்கள் மற்றும் படையெடுப்புகள் போன்றவற்றால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடல், மன உளைச்சலில் இருந்து மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரின் விளைவாக பாலஸ்தீனத்தின் உள்கட்டமைப்பும் பெரிதும் சேதமடைந்துள்ளது. 70 சதவீதம் உள்கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் இடிந்து குலுங்கியுள்ளன. இது பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேலும் கடுமையாக்கியுள்ளது.