பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா. இவர் தலைமையில் நேற்று முன்தினம் நெல்லையில் பாஜக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் ஒரு நாடக மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திமுக மற்றும் விசிகாவின் கூட்டணி நாடகம் அரங்கேற்றப்பட்டது. மது கடைகளை மாநில அரசு திறந்த நிலையில் அதனை ரத்து செய்வதற்கான சட்டமும் மாநில அரசின் கைகளில் இருக்கிறது.

எனவே மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசுகள் சட்டம் இயற்றினால் போதுமானது. இதற்கு மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. இப்படி இருக்கும்போது மதுவிலக்கை மட்டும் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று சொல்வது நாடகம். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 சதவீத வாக்குகளை திமுக இழந்துள்ளது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்றால் கண்டிப்பாக திமுகவின் ஊழல் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம். மேலும் இது கண்டிப்பாக நடக்கும் என்று கூறினார்.