சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் மரகதம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் ஷாலினி தனது வீட்டிற்கு அருகே உள்ள அருண் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் ஷாலினியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அருணின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவனை ஏற்க மறுத்துள்ளனர். பெற்றோரின் பிடிவாதத்தால் ஷாலினி அருணுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

ஷாலினி பேசாததால் அருண் தனது நண்பன் ஈஸ்வரனுடன் சேர்ந்து கடந்த 2022 மார்ச் 24 இல் ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசியுள்ளனர். இதனால் அவமானம் தாங்காமல் ஷாலினி தனது வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆர்.கே நகர் காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அருண்னையும் அவனது நண்பன் ஈஸ்வரனையும் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரையும் அல்லிக்குளம் சிறப்பு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.தேவி குற்றவாளியான அருண், ஈஸ்வரனை தலா ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் எனவும், மேலும் ஷாலினியின் குடும்பத்தினருக்கு தலா 20,000 ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார். ஷாலினியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.