ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவின் அடிப்படையிலேயே இந்துராஷ்டிரம் உள்ளது. நாம் பழங்காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்துக்கள் என்பவர்கள் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையுடன் செல்பவர்கள். எனவே ஜாதி மதம் மொழி பாகுபாடுகளை கடந்து சண்டைகளை மறந்து இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் கடவுளை எதிர்பார்ப்பவர்கள் ஹிந்து மதத்தினர்‌.

அவர்களுக்கு தங்கள் பிரச்சனையை தாங்களே எதிர்கொண்டால்தான் கடவுள் உதவி செய்வார் என்பது தெரியவில்லை. மகாபாரதத்தில் பாண்டவர்கள் தயாராக இருந்ததை அறிந்த பின்னர்தான் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்காக தேரோட்டினார். அவர் நிறுத்தி இருந்தால் போரை நிறுத்தி உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அவர் விரும்புகிறார். மேலும் பாரதமாதாவை காப்பாற்ற நாம் அனைவரும் முயற்சி செய்வதோடு அந்த முயற்சிக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மோடு அரவணைத்து செல்ல வேண்டும். இதுதான் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்று கூறினார்.