
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதகுப்பட்டி பகுதியில் மோனிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு கலை கல்லூரியில் படித்து வந்தார். இந்த மாணவியை ஆகாஷ் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் மோனிஷா வீட்டிற்கு சென்று ஆகாஷ் திருமணம் செய்து வைக்குமாறு அவருடைய பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். அவர்கள் ஆகாசை விரட்டி அடித்துவிட்டனர். இருப்பினும் ஆகாஷ் தொடர்ந்து இளம்பெண்ணிடம் தகராறு செய்ததோடு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஆகாஷ் மோனிஷா வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி கோபத்தில் அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் ஒரு பீர் பாட்டிலால் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.