
பீகார் மாநிலத்தில் உள்ள சௌபர் மதன் கிராமத்தில் ரமேஷ் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மிராசுதாரர். சொந்தமாக கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழி பண்ணையில் ரிங்கு மஞ்சி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 4-ம் தேதி ரமேஷ் படேலிடம் தான் வேலை பார்த்ததற்கான சம்பளத்தை கேட்டுள்ளார். இதனால் ரமேஷ் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து துன்புறுத்தினார். அப்போது ரமேஷ் படேலின் மகனும் இன்னொருவரும் சேர்ந்து ரிங்கு மீது எச்சில் துப்பியதோடு, ரமேஷின் மகன் அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
அதோடு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதோடு ஜாதி பெயரை சொல்லியும் திட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்போனில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ரிங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரிடம் புகார் பெற்று போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்த நிலையில் முன்னதாக இதே போன்ற ஒரு சம்பவம் அப்பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.