
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள முட்டாக்கட்டி பகுதியில் இரண்டு முறை முகமூடி கொள்ளையர்கள் செய்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலாக, ஜனவரி 19-ம் தேதி விவசாயி சின்னையா (58) மற்றும் அவரது மனைவி சரஸ்வதி (53) ஆகியோர் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று கொள்ளையர்கள் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து புகார் அளித்தும், கொள்ளையர்கள் இதுவரை பிடிபடவில்லை.
இந்த நிலையில் அக். 12ம் தேதி அதிகாலை மீண்டும் ஒரே வீட்டில் முகமூடி அணிந்த இருவர் நுழைந்து, சரஸ்வதியின் இரண்டு காதுகளையும் அரிவாளால் அறுத்து, அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தோடுகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதனால் காயமடைந்த சரஸ்வதி சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரே வீட்டில் இரு முறை கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது, அப்பகுதி மக்களை மிகவும் அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.