சென்னையில் நேற்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிதீவிர கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த போதிலும் மழையின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக தமிழக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் இடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு முன் எச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்தும், பல்வேறு உத்தரவுகளை ‌ பிறப்பித்தார்.

இந்நிலையில் தமிழக  முதல்வர் ஸ்டாலினும் நேற்று சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவர் வடசென்னை பகுதியான யானை கவுனி பகுதியில் மழை பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மழைநீர் தேங்காாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சென்னையில் இரு நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து விழிப்புடன் இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.