
ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையம் ஓடைமேடு பகுதியில் வசிக்கும் பட்டியலின பெண் தோட்டத்து வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மூலகல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த பெண் வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த இரண்டாம் தேதி அந்த நபர் பெண்ணை தொடர்பு கொண்டு தன்னை பார்த்து வருமாறு அழைத்துள்ளார்.
அவர் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்து தனது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கடுமையாக வன்புணர்ச்சி செய்ததோடு, அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். சாதி ரீதியாக கீழ்மையாகக் காட்டும் வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பெண்ணை மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அவர்களின் இருந்து தப்பித்து வந்து அந்த பெண் தன் கணவரிடம் உண்மையை தெரிவித்தார். அவர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர். புகாரில் பாலியல் வன்முறை மற்றும் சாதி அடிப்படையிலான வன்கொடுமைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.