
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில் உள்ள அனைவரிடமும் மிகவும் பாசமாக பழகி வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது தேங்கிய தண்ணீரில் எங்கிருந்தோ நல்ல பாம்பு ஒன்று அவருடைய வீட்டிற்குள் வந்து விட்டது. பொதுவாக பாம்பை கண்டால் படையும் நடக்கும் என்று கூறுவார்கள். ஆனால் தன் எஜமானர் குடும்பத்தை காப்பதற்காக அந்த பூனைக்குட்டி துணிச்சலாக அந்த பாம்பின் முன் நின்று அதனை முறைத்து பார்த்து எஜமானர் குடும்பத்திற்கு அரணாக நின்றது.

அதாவது அந்த பாம்பு தோட்டத்திற்குள் தான் நுழைந்தது. இதனால் அதனை வீட்டிற்குள் நுழையவிடாமல் பூனை தடுத்து நிறுத்தியது. இதன் காரணமாக அந்த பாம்பு படம் எடுத்து ஆடியது. இருப்பினும் தன் பார்வையிலேயே பூனை அதனை மிரட்டி வீட்டிற்குள் நுழைய விடவில்லை. சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வந்த உரிமையாளர் அந்த காட்சியை கண்டு திகைத்துப் போய் நின்றார். இதைத்தொடர்ந்து அவர் பாம்பு பிடி வீரருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிலையில் அவர் உடனடியாக வந்து அந்த பாம்பினை அங்கிருந்து பிடித்து சென்றார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.