
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர் குழந்தையின் தொப்புள் கொடியை ஆப்ரேஷன் தியேட்டருக்குள் சென்று வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவை சமீபத்தில் அவர் பகிர்ந்த நிலையில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை கடந்த 19ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்த நிலையில் டாக்டர் ஒருவரின் கத்திரிக்கோலை வாங்கிய அவர் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சர்ச்சையாக மாறிய நிலையில் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கடிதம் எழுதி அனுப்பியது.
பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்வதற்கு தடை விதித்து ஊரக நல்வாழ்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு அந்த மருத்துவமனைக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அங்கு சிகிச்சை பெறுபவர்கள் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக இர்பான் மீதும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.