திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இளங்குமரன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரேணுகாதேவி ‌(54) என்ற மனைவியும் வினித் (24) என்ற மகளும், தேன்மொழி ‌(17) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் ரேணுகாதேவி அரசு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்த நிலையில் வினித் தனியார் ஐடி நிறுவனத்தின் வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பிறகு தேன்மொழி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியாவார். இந்நிலையில் கோவையில் பணிபுரிந்து வரும் வினித் தன்னுடைய வீட்டிற்கு செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் குடும்பத்தில் யாரும் போனை எடுக்காததால் தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார்.

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்த நிலையில் நீண்ட நேரமாக தட்டியும் கதவை யாரும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது தாய் மற்றும் மகள் இருவரும் கழுத்து அறுபட்ட நிலையிலும் விஷம் குடித்த நிலையிலும் சடலமாக கிடந்த நிலையில் தந்தையும் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக வினித்துக்கு தகவல் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.