திருவள்ளூரின் துணை ஆட்சியரான செல்வமதி மற்றும் வெங்கடேசன் தம்பதியரின் மகள் ஸ்வஐன்யா மற்றும் முகேஷ்குமார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் திருச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இந்த திருமணம், பொதுவாக நடைபெறும் திருமணங்களில் இருந்து பல்வேறு விதங்களில் மாறுபட்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. திருமண வரவேற்பின் போது, பழங்கால இசைக்கருவிகளை கச்சேரி மூலம் அனைவருக்கும் காட்சிபடுத்தினர்.

முன்பெல்லாம், மணமகனின் மாங்கல்யம் கட்டும் சடங்கு மட்டுமே நடைமுறையாக இருந்தாலும், இந்த திருமணத்தில் ஒரு புதுமையான நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. மணமகன் மாங்கல்யம் கட்டியதையடுத்து, மணமகளும் மணமகனின் கையில் மாங்கல்யத்தால் செய்யப்பட்ட கைச்செயினை கட்டினார். இந்த நிகழ்வு, ஆண்-பெண் சமத்துவத்தை சுட்டிக்காட்டும் விதமாக புதுமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் நடுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதைப்பந்துகள் வழங்கப்பட்டு, “பனை விதை, மாநில விதை: மாநிலம் முழுவதும் அதை விதை” என கூறப்பட்டு, பசுமையை பரவலாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.