வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த டானா புயல் இன்று காலை அதிதீவிர புயலாக மாறி கரையை கடந்துள்ளது. வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் வடக்கு ஒடிசாவின் பிதார் கனிகா-தமரா இடையே இரவு 1.30 முதல் மூன்று முப்பது மணி வரை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 110 வேகத்திலும் இடையிடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் கரையை கடந்த போது ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் கரையோர பகுதிகளில் சூறைக்காற்று பலமாக வீசிய நிலையில் மழை தாண்டவம் ஆடியது. குறிப்பாக பூரியில் உள்ள கரையோர பகுதிகளில் பலத்த மழையின் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்கள்  வேரோடு சாய்ந்து விழுந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதே போன்று மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும் புயல் கரையை கடந்த போது மேற்கண்ட இரு மாநிலங்களிலும் பலத்த மழை பெய்துள்ளது.