
தமிழகத்தில் தற்போது அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் எஸ் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் டிசம்பர் 1-ம் தேதி நிலவரப்படி பணி மாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு வாய்ந்தவர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும் எனவும், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் விபரங்களையும் மாவட்ட வாரியாக தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் சேர்க்கப்படுபவர்கள் இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடப்பிரிவுகளில் முதன்மை பாடம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 1-க்கு பிறகு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை ஆண்டுக்கு தற்காலிகமாக துறந்தவர்கள் ஏற்கனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்கள் ஆகியோர்களின் பெயர்களை இந்த பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் இளங்கலை பட்டத்தில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் ஒரே வருடத்தில் 2 பட்டங்கள் பெற்றவர்கள் பெயர்களை இந்த பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.