
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உற்சாகமான பேச்சு நிகழ்த்தினார். மாநாட்டிற்கு கட்சித் தொண்டர்களை அழைத்து வரவே பலர் வாடகை வேன்கள், பேருந்துகளை பயன்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வந்த சில வேன் ஓட்டுனர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதில், சென்னையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகியோர் தவெக நிர்வாகி மோகன் மீது பணம் வழங்காதது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓட்டுனர்கள் கூறியதாவது, “தவெக நிர்வாகி மோகன் எங்களை அணுகி மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். சம்பளத் தொகை முன்பே பேசி ஒப்பந்தம் செய்தபோது, பின்பு மதுபானம் அருந்திய தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர். மாநாடு முடிந்த பிறகும் மோகன், முதலில் கூறியபடி சம்பளத் தொகையை தர மறுத்தார்; மேலும், பணத்தை கேட்டதற்காக கொலை மிரட்டல் விடுத்தார்” என்று தெரிவித்தனர்.
மேலும், மோகன் மற்றும் சுதாகர் ஆகியோர் அவர்களை ஆபாசமாக திட்டி விரட்டியதாகவும், அவர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். இந்த புகார் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.