மகாராஷ்டிர மாநிலம் வர்தா மற்றும் பிகார் மாநிலம் மதுபானியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள், புடவை அணியும் வழக்கத்தைப் பொறுத்து அதிர்ச்சிகரமான முடிவுகளை வெளிக்கொண்டுவந்துள்ளன. பெண்கள் புடவை அணியும் போது இடுப்பில் இறுக்கமாக அணியும் பாவாடைதான் சில சந்தர்ப்பங்களில் தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பட்ஜோலின் புண் எனப்படும் தோல் புற்றுநோய்க்கான அடையாளங்கள்:

இதில் இடுப்பு பகுதியில் திடீரென தோல்புண் உருவாகியுள்ள சில பெண்கள் மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக வர, அப்புண் நாள்பட்டதொரு காயமாக மாறி பரவுகிறது. ‘மார்ஜோலின் புண்’ என அறியப்படும் இந்த குறைபாடு, உடலில் நீண்டநாள் ஆறாத காயங்கள், தீக்காயம், அல்லது தழும்புகள் மூலம் தோல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை உள்ளடக்கியது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் முதல் நிகழ்வாக 70 வயது பெண் ஒருவர், இடுப்புப் பகுதியில் முற்றிலும் ஆறாத காயத்தை வைத்திருந்தார். 18 மாதங்களாக ஆறாமல் வலி தரும் இந்த காயத்தால் சிக்கல்களை சந்தித்த அவர், புடவை அணிவதை வழக்கமாகக் கொண்டவர். அவரின் பாவாடை அணிந்த பகுதியில் தோல் நிறம் மாறி காயம் பெரிதாகி வருவதைக் கண்டனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் தோல் புற்றுநோய் தோன்றியதையும் உறுதி செய்தனர்.

மற்றொரு 60 வயதுடைய பெண், இடுப்புப் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ஆறாத காயம் ஏற்பட்டதாகவும், அதை மருத்துவ பரிசோதனைக்காக வந்தபோது கண்டறிந்தனர். இவர் புடவை அணிவதையே பழக்கமாகக் கொண்டவர், எனினும் இறுக்கமான உடையை அணிவதை தவிர்த்து வந்தார். ஆய்வின் போது அவரின் காயமும் ‘மார்ஜோலின் புண்’ என அடையாளம் காணப்பட்டது.

ஆய்வு முடிவுகளைப் பொறுத்து, இடுப்பில் அதிக அழுத்தம் தரும் இறுக்கமான உடைகள் பெண்களில் தோல் சிதைவையும் புற்றுநோய் அபாயத்தையும் உருவாக்குவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெண்கள் புடவை அணியும் போது, சற்று தளர்வாக உடலோடு பொருந்தும் வகையில் பாவாடையை தேர்வு செய்ய வேண்டும். மேலும், காயம் ஏற்பட்டாலோ, தொடர்ந்த வலியோ இருந்தால், உடனே மருத்துவர்களின் ஆலோசனையை நாட வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.