
மதுரை செல்லூர் பெரியார் தெருவில் வசிக்கும் வாசுதேவன் (வயது 62) என்ற முதியவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் லட்சுமணன் (வயது 28) மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. லட்சுமணன் தொடர்ந்து மது குடித்து வேலைக்கு செல்லாமல், தினமும் வீட்டு உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த போதையில் லட்சுமணன் தனது தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாசுதேவன் தனது மகன் லட்சுமணனை வீட்டு மொட்டை மாடியில் வைத்து, அங்கு கிடந்த கிரைண்டர் கல்லை தலையில் அடித்து கொலை செய்தார். இதனால் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் உயிரிழந்தார். மகனை கொலை செய்த பிறகு, வாசுதேவன் அருகில் உள்ள செல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.