விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். சமீபத்தில் கருப்பசாமியும், அவரது மகனும் இறந்துள்ளனர். இந்த நிலையில் இருவரின் இறப்பும் பேச்சியம்மாளை மனதளவில் பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. இதனால் சில காலமாக பேச்சியம்மாள் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆலமரத்துப்பட்டி ரயில்வே நிலையத்தில் மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் விரைந்து வந்து கொண்டிருக்கும் வேளையில் பேச்சியம்மாள் திடீரென எதிர்பாராத விதமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உள்ளதாக அப்பகுதியில் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று அதே நாளில் சென்னை தாம்பரத்திலிருந்து செங்கோட்டையை நோக்கிச் செல்லும் விரைவு ரயில் சாத்தூர் அருகே வந்து கொண்டிருக்கும்போது 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில் சாத்தூரில் குருளிங்க புறத்தில் வசித்து வந்த சுந்தரி (56) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.