தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தைப் பற்றி மட்டுமே இருக்க வேண்டும்.  திரையரங்குகளுக்கு வெளியே திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல youtube சேனல்கள் எல்லை மீறி தங்களது கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து அதனை தொடர்ந்து வெளியிட்டு அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதனை எடுத்து செல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சமீபத்தில் கங்குவார் திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர் திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும் வன்மத்தையும் கக்கியுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அனைவரும் அத்தகைய கருத்துகளை பதிவு செய்து மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற youtube சேனல்களையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தைக் கேட்டு youtube சேனல்களில் பதிவு செய்யும் முறை வந்தபின் பல பார்வையாளர்கள் இத்தகைய வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருகின்றனர். ஏதோ திரைப்படம் அவரின் மொத்த நிம்மதியை குறைத்து விட்டது போல பேசி பிரபலம் அடையவும் முயற்சி செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் பேசுவதை எந்த அளவு பாதிப்பை திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல youtube சேனல்கள் அதனை ஊக்குவித்து வருகின்றன. அதோடு எந்தவித எடிட்டிங் செய்யாமல் அத்தகைய கருத்துகளை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலமும் படுத்துகின்றனர். இத்தகைய செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது.

மேலும் பப்ளிக் ரிவ்யூ/பப்ளிக் டாக் என்ற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டிக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவார் திரைப்படங்களுக்கு பப்ளிக் ரிவ்யூ மூலம் பெருமளவில் பாதிப்பை youtube சேனல்கள் ஏற்படுத்தி உள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல் திரை துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த உரையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே முதல் முயற்சியாக அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த youtube சேனல்களும் எடுக்க தடை செய்ய வேண்டும் மற்றும் பப்ளிக் ரிவ்யூ அண்ட் டால்க் நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.