மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது அந்த 16 வயது சிறுவன் அங்குஷ் பலேராவை கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு மறுநாள் நவம்பர் 15 அன்று காலை 9.50 மணி அளவில் அங்குஷ் பலேராவ் ரயிலில் இருந்து பிளாட்பாரத்தில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது அங்கு அவருக்காக காத்திருந்த சிறுவன் அவர் மீது சரமரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் காலை நேர கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுவன் தப்பி சென்று விட்டார்.

அக்கம் பக்கத்தினர் அங்குஷ் பலேராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சிறுவனையும் சிறுவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைக்க உதவிய அவரது மூத்த சகோதரன் சனாவுல்லா ஷேக் என்பவரையும் கைது செய்துள்ளனர்.