கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நீலகிரியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(27) என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் தனது அம்மாவிற்கு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யன்கொல்லை கொண்டான் கிராமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மலைக்கனி என்பவரது மகள் ஆனந்தியுடன் தமிழ்ச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மூன்று வருடமாக காதலித்து வந்தனர்.

தமிழ்ச்செல்வன் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருந்தபோதே திருப்பூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார். அவர் ஆனந்தியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்தார். ஆனந்தியின் தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என கோபத்தில் மழைக்கனி அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு ஆனந்தியின் அண்ணன் ராஜாராமும் உடந்தையாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் துடியலூர் தனியார் மருத்துவமனைக்கு வந்த மலைக் கனியும் ராஜாராமும் தமிழ்செல்வனை செல்போன் மூலம் வரவழைத்து அருகில் இருக்கும் காலி இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மலைகனியும் ராஜாராமும் தமிழ்ச்செல்வனை கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு பகுதியில் குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் மலைக்கனி, ராஜாராம் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.