
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் அதற்கு பதிலாக கலைஞர் கைவினை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விஸ்வகர்மா திட்டத்தை பெயர் மாற்றி கலைஞர் கைவினை திட்டம் என்ற பெயரில் திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் கலைஞர் கைவினை திட்டத்தில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் இணைய முடியும் எனவும் எனவே விஸ்வகர்மா திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முதல்வரின் மருமகன் சபரீசன் அதானியை சந்தித்துள்ளார்.
கடந்த வாரம் கூட அதானியை முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்தித்துள்ளனர். இதுவரை அதானியும் சபரீசனும் சந்திக்கவில்லை என்று முதல்வர் சட்டசபையில் கூறுவாரா.? அவ்வாறு கூறினால் நாங்கள் ஆதாரத்தை வெளியிட தயாராக இருக்கிறோம். அதானியை சந்திக்கவில்லை என்று முதல்வர் பொய் சொல்லக்கூடாது. டங்ஸ்டன் துறைமுக விவகாரம் குறித்து மத்திய அமைச்சரை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். டெல்லியில் நாளை நடைபெறும் சந்திப்புக்கு பிறகு நாங்கள் நல்ல முடிவுடன் வருவோம் என்று கூறினார். மேலும் சட்டசபையில் அதானியை சந்திக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது அதானியை முதல்வர் மருமகன் சந்தித்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதனை வெளியிட போவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.