
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் விறகுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். அப்போது விறகுகளுக்குள் ஒரு சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது சடலமாக கிடந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மங்கையன் என்பது தெரியவந்தது. அவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.
மங்கையனின் தங்கை உறவு முறை கொண்ட ஒரு பெண்ணுக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மங்கையன் முத்துக்குமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் முத்துக்குமார் கத்தியால் மங்கையன் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். மேலும் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் உயிரிழந்த மங்கையனின் சடலத்தை விறகுகளுக்குள் போட்டு தீ வைத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர்.